• Skip to primary navigation
  • Skip to content
  • Skip to footer

தமிழினி

ஆசிரியர் : கோகுல் பிரசாத்

  • தமிழ்
    • தலையங்கம்
    • திரைப்படக் கலை
    • சிறுகதை
    • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • மதிப்புரை
    • கட்டுரை
    • நாவல் பகுதி
  • English
    • Poetry
    • Editor’s Picks
    • Philosophy
    • Politics
    • Sports
    • Reviving the Classics
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
You are here: Home / தமிழ் / லேலி லாங் சோல்ஜர் ( Layli Long Soldier) – த. கண்ணன்

லேலி லாங் சோல்ஜர் ( Layli Long Soldier) – த. கண்ணன்

by Gokul
September 13, 2018Filed under:
  • கவிதை
  • தமிழ்

[லேலி லாங் சோல்ஜர் அமெரிக்காவின் பூர்வக்குடிகளுள் ஒன்றான லகோட்டா இனத்தைச் சேர்ந்த கவிஞர். அவரது Whereas, 38ஆகிய நீள் கவிதைகள் முக்கியமானவை. Whereas மிகவும் அடர்த்தியான கவித்துவ மொழியிலும், 38 மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட, நேரடியான மொழியிலும் நுட்பமான அரசியல் பிரச்சனையை அணுகுகின்றன. Whereas என்ற தலைப்பில் அவரது கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. Whiting Writers விருது வென்றிருக்கிறார்.]

Layli Long Soldier

————————

இங்கு வாக்கியம் (sentence) மதிக்கப்படும்.

எழுத்துவிதிகள்வலியுறுத்துவதற்கு மதிப்பளித்து, ஒவ்வொரு வாக்கியத்தையும் கவனத்துடன் அமைப்பேன்.

உதாரணமாக, எல்லா வாக்கியங்களும் பெரிய எழுத்துகளோடு (capital letters) தொடங்கும்.

அதேபோல, ஒரு வாக்கியத்தின் வரலாறு மதிக்கப்படும். ஒவ்வொன்றையும் முற்றுப்புள்ளி அல்லது கேள்விக்குறி என்று பொருத்தமான நிறுத்தற்குறிகளுடன் முடித்து அதன்மூலம் ஒரு கருத்து (கணநேர) முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

நீங்கள் அறிந்துகொள்ள விரும்பலாம், நான் இதை ஒரு ‘இலக்கியப் படைப்பாகக்’ கருதவில்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சிறந்த கற்பனை மிகுந்த கவிதையாகவோ புனைவாகவோ இதை நான் கருதவில்லை.

வாசிப்பு சுவாரசியத்துக்காக வரலாற்று நிகழ்வுகள் நாடகீயமாக்கப்படமாட்டா.

எனவே, ஒழுங்கு கூடிய வாக்கியத்துக்கான பொறுப்பை நான் உணர்கிறேன்; அது எண்ணங்களைக் கடத்தும் கருவி.

நிற்க; இனி நான் தொடங்குகிறேன்.

நீங்கள் டகோட்டா 38 (Dakota 38) பற்றி கேள்விப்பட்டோ, படாமலோ இருக்கலாம்.

இப்போதுதான் அதைப்பற்றி முதல்முறை கேள்விப்படுகிறீர்களெனில், ‘என்ன இது, இந்த டகோட்டா 38?’ என்று திகைக்கலாம்.

டகோட்டா 38, ஜனாதிபதி அபிரகாம் லிங்கனின் ஆணைப்படி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு தூக்கிலடப்பட்ட முப்பத்தியெட்டு டகோட்டா ஆண்களைக் குறிக்கிறது.

இதுநாள்வரை, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ‘சட்டப்படியான’ கூட்டு மரணதண்டனை இதுதான்.

தூக்கிலிடுதல், டிசெம்பர் 26, 1862ம் நாள் நிறைவேறியது – கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள்.

‘அதே வாரம்’ தான் குடியரசுத்தலைவர் லிங்கன் [ஆப்பிரிக்க-அமெரிக்கருக்கான] விடுதலைப் பிரகடணத்தில் (Emancipation Proclamation) கையெழுத்திட்டார்.

முந்தைய வரியில் ‘அதே வாரம்’ என்பதை ஓர் அழுத்தத்திற்காகத்தான் நான் சாய்த்து [மேற்கோளுக்குள்] எழுதியுள்ளேன்.

அபிரகாம் லிங்கனின் ஆட்சிக்காலத்தைப் பற்றி லிங்கன் என்றொரு திரைப்படம் வந்தது.

விடுதலைப் பிரகடணத்தில் அவர் கையெழுத்திட்டது அத்திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருந்தது; டகோட்டா 38 தூக்கிலிடப்பட்டது சேர்க்கப்படவில்லை.

எது எப்படியோ, நீங்கள் வினவக்கூடும், “முப்பதியெட்டு டகோட்டா ஆட்கள் எதற்காகத் தொங்கவிடப்பட்டார்கள்[hung]?”

ஒரு கூடுதல் குறிப்பு, hang (தொங்கு)என்பதன் இறந்தகாலத்தைக் குறிக்கும் சொல் hung, ஆனால் தூக்கிலிடப்படுவதைக் குறிப்பிடும்போது மட்டும், சரியான சொல் hanged.

எனவே, நீங்கள் கேட்பது இப்படியாக இருக்கக்கூடும்,         “முப்பதியெட்டு டகோட்டா ஆட்கள் எதற்காகத் தூக்கிலிடப்பட்டார்கள் (hanged)?”

அவர்கள் சியாக்ஸ் எழுச்சிக்காக (Sioux Uprising) தூக்கிலிடப்பட்டார்கள்.

சியாக்ஸ் எழுச்சி பற்றி நான் உங்களுக்குச் சொல்லவேண்டும், ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை.

நான் தாவிச் செல்லக்கூடும், சில தகவல்கள் காலவரிசையின்றி விரியக்கூடும்.

நான் வரலாற்றாய்வாளர் அல்லள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

எனக்குள்ள குறைவான வள ஆதாரங்களையும் புரிதலையும் கொண்டு, உண்மைகளை என்னால் முடிந்தவரை கூறுகிறேன்.

மினெசொட்டா மாநிலமாவற்கு முன்னர், மினெசொட்டா என்று நாம் பொதுவாகக் கூறக்கூடிய பகுதி, டகோட்டா, அனிஷினாபெக், ஹோ சுங்க் ஆகிய மக்களுக்கு பாரம்பரியத் தாயகமாக இருந்தது.

1800களில், அமெரிக்க ஐக்கிய நாடுகள் தனது நிலங்களை விரிவுசெய்துகொண்டிருந்தபோது, டகோட்டா மக்களிடமிருந்தும் பிற இனங்களிடமிருந்தும் நிலத்தை ‘விலைக்கு வாங்கினார்கள்’.

இந்த வகை ‘விலைக்கு வாங்குதலை’ப் புரிந்து கொள்வதற்கான இன்னொரு முறை: டகோட்டா இனத்தலைவர்கள் நிலங்களை அமெரிக்க அரசுக்கு பணத்துக்காகவும் பொருள்களுக்காவும் விட்டுக்கொடுத்தனர், ஆனால் இன்னும் முக்கியமாக, தம் மக்களின் பாதுகாப்புக்காக.

சிலர், டகோட்டா தலைவர்கள் ஒப்பந்த விதிமுறைகளைப் புரிந்தகொள்ளவில்லை என்கின்றனர், இல்லையேல் ஒருபோதும் அவற்றிற்கு ஒப்புக்கொண்டிருக்கமாட்டார்கள்.

வேறு சிலர், இந்த மொத்த பேரத்தையும் ‘நயவஞ்சகம்’ என்கின்றனர்.

என்னவாக இருந்திருந்தாலும், அதை அதிகாரப்பூர்வமாக்கவும் கட்டாயமாக்கவும், அரசாங்கம் ஒரு  முதல்கட்ட உடன்படிக்கையை வரைந்தது.

இந்த உடன்படிக்கை இன்னொரு (வசதியான) உடன்படிக்கையால் மாற்றப்பட்டது; அது பிறிதொன்றால்.

அதன் இறுக்கமான சட்டத்துறை மொழியாலும்சட்டமாமன்ற வழக்காலும், இந்த உடன்படிக்கையின் வரையீடுகளைப் புரிந்து கொண்டு விளக்குவதற்குக் கடினமாக உணர்ந்திருக்கிறேன்.

உடன்படிக்கைகள் தள்ளுபடி செய்யப்பட்டு (மீறப்பட்டு), புது உடன்படிக்கைகள் வரையப்பட்டபோது, ஒன்றன்பின் ஒன்றாக, புதிய உடன்படிக்கைகள் பழைய காலாவதியான உடன்படிக்கைகளை மேற்கோள்காட்டுகின்றன; இது சகதியும் கொண்டையூசி வளைவுகளும் நிறைந்த வழித்தடம்.

இந்த வழித்தடத்தில் நான்அடிக்கடி தொலைந்துவிட்டதாக உணர்ந்தாலும், நான் மட்டும் அப்படியில்லை என்பதை அறிவேன்.

என்னால் இயன்றவரை உண்மைகளைக் கோர்த்ததில், 1851ல், டகோட்டா பகுதி மினெசொட்டா நதியின் ஓரம் பன்னிரண்டுக்கு நூற்றைம்பது மைல் நிலத்துண்டில் அடங்கிப்போனது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, 1858ல், வடபகுதி விட்டுக்கொடுக்கப்பட்டது (கைப்பற்றப்பட்டது), தென்பகுதி (வசதியாக) பிறருக்கு ஒதுக்கப்பட்டது. இவை டகோட்டாவை 10 மைல் வறண்ட பரப்பிற்குள் குறுக்கின.

இப்படி மாற்றப்பட்ட, மீறப்பட்ட உடன்படிக்கைகள் பலசமயங்களில் மினெசொட்டா உடன்படிக்கைகள் எனப்படுகின்றன.

மினெசொட்டா என்ற சொல், நீர் எனப்பொருள்படும் மினி, கலங்கிய எனப் பொருள்படும் சொட்டா ஆகிய சொற்களிலிருந்து வருகிறது.

கலங்கிய (turbid) என்ற சொல்லுக்கு இணைச்சொற்களாகச் சொல்லத்தக்கவை சகதியான, தெளிவற்ற, மேகமூட்டமான, குழப்பமான, புகைமண்டிய போன்றவை.

எல்லாமே நாம் பயன்படுத்தும் மொழியில் உள்ளது.

உதாரணமாக, உடன்படிக்கை (treaty)என்பது இரண்டு நாடுகளுக்கிடையே செய்யப்படும் ஒப்பந்தம் (contract).

டகோட்டா நாட்டுனான அமெரிக்காவின் உடன்படிக்கைகள் பணம் தருவதாக வாக்களித்த ஒப்பந்தங்கள்.

இந்த பணத்தை, டகோட்டா விட்டுக்கொடுத்த நிலத்துக்காகக் கொடுக்கப்பட்ட தொகை என்று சொல்லலாம்;  நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்குள் (தனிக்குடியேற்றத்துள்) அவர்கள் வாழ்வதற்காக எனலாம்; அவர்களது பரந்த வேட்டை நிலங்களின் மீதான உரிமைகளை விட்டுத்தருவதற்காகவும் எனலாம் – இது தன்னளவில், டகோட்டா மக்கள் பிழைப்புக்குப் பிற வழிகளை – பணத்தை – சார்ந்திருக்கச்செய்தது.

முந்தைய வாக்கியம் சுழற்சியானது, சரித்திரத்தின் பல்வேறு அம்சங்களைப் போல.

கூடுதலாக, உள்ளூர் அரசு வணிகர்கள் ‘இந்தியர்களுக்கு’ உணவும் சாமான்களும் கடனுக்குத் தரமாட்டார்கள்.

பணமில்லாமல், கடைகளில் கடன் இல்லாமல், தங்களது பத்து-மைல் நிலப்பகுதிக்கு அப்பால் வேட்டையாடும் உரிமையில்லாமல், டகோட்டா மக்கள் பட்டினிகிடக்கத் தொடங்கினார்கள்.

டகோட்டா மக்கள் பட்டினிகிடந்து கொண்டிருந்தார்கள்.

டகோட்டா மக்கள் பட்டினிகிடந்தார்கள்.

முந்தைய வாக்கியத்தில், பட்டினிகிடந்தார்கள் என்பதைக் கவனப்படுத்தச் சாய்த்தெழுதவேண்டியதில்லை.

“டகோட்டா மக்கள் பட்டினிகிடந்தார்கள்” என்பதை நேரடியாக, எளிமையாத் தெரிவிக்கப்பட்ட உண்மைச் செய்தியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதன் விளைவாக – தொடர்ந்து பட்டினிகிடப்பதைத் தவிர வேறு மார்க்கமின்றி – டகோட்டா மக்கள் பதிலடிகொடுத்தனர்.

டகோட்டா வீரர்கள் ஒருங்கிணைந்தனர், தாக்குதல் தொடுத்தனர், வந்தேறிகளையும் வணிகர்களையும் கொன்றனர்.

இந்தப் புரட்சி சியாக்ஸ் எழுச்சி என்றழைப்படுகிறது.

இறுதியில், அமெரிக்க ராணுவம் எழுச்சியை அடக்க மினெசொட்டா வந்தது.

ஓராயித்துக்கும் மேற்பட்ட டகோட்டா மக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

முன்பே குறிப்பிட்டதுபோல, முப்பத்தியெட்டு டகோட்டா ஆண்கள் பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.

அவர்கள் தூக்கிலிடப்பட்டபின், ஆயிரம் டகோட்டா கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதன் கூடுதல் விளைவாக, மினெசொட்டாவில் டகோட்டா பகதி என்று எஞ்சியிருந்ததும் கலைக்கப்பட்டது (திருடப்பட்டது).

டகோட்டா மக்கள் திரும்புவதற்கோர் நிலமில்லை.

அவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள் என்று இது பொருள்படுகிறது.

வீடற்றவர்களாகி, மினெசொட்டாவிலிருந்த டகோட்டா மக்கள் தென் டகோட்டாவிலும் நெப்ராஸ்காவிலும் தனிக்குடியேற்றங்களுக்குள்  மாற்றியிருத்தப்பட்டார்கள் (காட்டாயப்படுத்தப்பட்டார்கள்).

இப்போது, ஒவ்வொரு ஆண்டும், டகோட்டா 38+2 ரைடர்ஸ் (Riders) எனப்படும் குழு தென் டகோட்டாவிலுள்ள கீழ் ப்ரூல்லில் இருந்து மினெசொட்டாவின் மன்காடோ வரை, நீத்தார்நினைவுக் குதிரையேற்றப் பயணம் ஒன்றை நடத்துகிறார்கள்.

நினைவேந்தல் சவாரிக்காரர்கள் பதிணெட்டு நாட்களுக்கு 325 மைல்கள் குதிரைமீதே பயணம் செய்கின்றனர், சில சமயம், சுழியத்துக்கும் குறைவான வெப்பநிலையின் பனிச்சூறாவளிகளில்.

அவர்களது பயணத்தை டிசெம்பர் 26ம் தேதி நிறைவுசெய்கின்றனர். தூக்கிலேற்றிய நாள்.

நினைவுச்சின்னங்கள் குறிப்பிட்ட மக்கள்மீதும் நிகழ்வுகள்மீதும் நமது நினைவுகளைக் குவிக்கப் பயன்படுகின்றன.

பெரும்பாலும், நினைவுச்சின்னங்கள் பட்டயங்களாகவும், சிலைகளாகவும், சமாதிகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

டகோட்டா 38ன் நினைவுச்சின்னம், சொற்கள் பொறிக்கப்பட்ட ஒரு பொருள் அல்ல, அது ஒரு செயல்.

எனினும், நான் இந்த குறிப்பை (இதை நான் கவிதையென்றோ கதையென்றோ கருதவில்லை) எழுதத்தொடங்கியது புற்கள் பற்றி எழுதவேண்டும் என்ற எனது ஆர்வம் காரணமாகத்தான்.

எனவே, இன்னொரு நிகழ்ச்சியையும் இதில் சேர்க்கவேண்டும். அது காலவரிசைப்படி இல்லையாதலால் நாம் சற்றே பின்னோக்கி நகரவேண்டும் எனும்போதும்.

உங்களுக்கு நினைவிருக்கலாம், டகோட்டா மக்கள் பட்டினிகிடந்தபோது, அரசு வணிகர்கள் ‘இந்தியர்களுக்கு’ கடைகளில் கடனுக்குப் பொருள் வழங்க மறுத்தனர்.

ஆண்ட்ரூ மிரிக் என்ற வணிகர் டகோட்டா மக்களுக்கு தவணை வழங்க மறுத்ததற்குப்பின் சொன்ன கூற்றுக்காக புகழ்பெற்றவர். “அவர்களுக்குப் பசித்தால், புல்லைத் தின்னட்டும்,” என்றார்.

மிரிக்கின் கூற்றுக்குப் பாடபேதங்கள் உண்டு, ஆனால், எல்லாமே இந்த ரீதியில்தான் இருக்கின்றன.

குடியேறிகளும் வணிகர்களும் சியாக்ஸ் எழுச்சியின் போது கொல்லப்பட்டபோது, டகோட்டா மக்களால் முதலில் தண்டிக்கப்பட்டு இறந்தவர் ஆண்டரூ மிரிக்.

மிரிக்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது,

                                                                                                         அவரது            வாயில்

திணிக்கப்பட்டிருந்தது

புல்.

நான் டகோட்டா வீரர்களின் இச்செயலைக் கவிதை என்று கூறவிழைகிறேன்.

இக்கவிதையில் ஒருதுயர்முரண் உள்ளது.

எழுத்து என்று இதில் எதுவுமில்லை.

‘உண்மையான’ கவிதைகளுக்கு ‘உண்மையில்’ சொற்களே தேவையில்லை.

முந்தைய வாக்கியத்தை நான் சாய்த்தெழுதியுள்ளேன் – ஓர் ஆழ்மன உரையாடலையும், தெளிவு வெளிப்படும் தருணத்தையும் குறிப்பதற்காக.

ஆனால், மறுபடி யோசித்தால், ‘அவர்கள் புல்லைத் தின்னட்டும்’ என்ற சொற்கள் இக்கவிதையின் பற்சக்கரங்களைச்சரியான இடத்துக்குச் செலுத்துகின்றன.

அதனால், மொழியும் சொற்தேர்வும் கவிதையின் பணிக்கு அத்தியாவிசியம் என்றும் சொல்லலாம்.

பல விஷயங்கள் மீண்டும் ஒரு வட்டத்தில் சுழன்று வருகின்றன.

சில சமயங்களில், வட்டத்தில் இருக்கும்போது, வெளியேற விரும்பினால், நான் தாவ வேண்டும்.

உடலையாட்டிப்                                                    பறக்கவிடவேண்டும். (swing)

மேடையிலிருந்து.

                                                                                   வெளியே

                                                                                                               புல்வெளிக்கு.

நாம்

எங்களது மூச்சுக்காற்றினால், அணிவகுத்துச் செல்லும் எறும்புப் படையொன்று தாளிலிருந்து பறந்து செல்கிறது. நாங்கள் இதைச் சேர்ந்தேதான் செய்தோமெனினும் நாம் என்ற சொல்லை நான் பயன்படுத்துவதை, அந்த முன்முடிவை, அவள்விரும்புவதில்லை. ஆம், அந்த மூர்க்கமான இணைப்பு,

நான் தாண்டக்கூடாத ஒன்று. மேல்நோக்கிய கருமுனைகள் உன்னை you(நீ) என்று குறிப்பிடுகின்றன, கால்விரலிருந்து பாதத்துக்கும்பின் கால்விரலுக்கும், we(நாம்)-ன் நீளங்களைச் சரியாக அளந்து என்னை எனது காலடிகளுக்கிடையில் மையப்படுத்திக்கொள்ள. உன்னைப் பொறுத்தமட்டில் எதற்கென மறந்துவிட்டேன்,

இந்த எல்லை, மையத்தைக் குறிக்கும் தடுப்பு. இப்போது திருத்திக்கொள்கிறேன், அந்த வரியை வசதியாகத் தொடர நான் விரைகிறேன், வந்தவழியே பின்செல்கிறேன். நீயும் நானும் ஒற்றை மூச்சினால் ஒரு வரியிலிருந்து கலைந்த எறும்புகள் அல்ல.

ஒரு கவிதையின் வரி.

விளிம்பு

இந்த ஓட்டத்தின் போது சாலை வளைவு கரைகள் ஊடாக கைச்சக்கரத்தின் பின்னே நான் அம்மா எனப்படுகிறேன். இந்த ஓட்டங்களின் போது என் பெயர் அம்மா மணல் துடைப்பம் பனிக்காலத்தின் முடிவைக் கடக்கிறோம்.  பின்புற பிம்பத்தில் நீ பின்னிருக்கையின் நடுவே இரட்டைக் கொக்கியிடப்பட்டு என் அன்பே. உன் அம்மாவின் வாய்க்கு ஒரு கூரை உண்டு உன் அம்மாவின் வாய் ஒரு தேவாலயம். வெட்டவெளியில் தனித்து நிற்கும் குடிசை. சுவரிலிருந்து பறந்துவந்த தீப்பொறியைப்பற்றிக் கொண்டது ஓலைக்கூரை பாறையிலிருந்து பிரிந்த பொறி நிலையான அர்த்தத்திலிருந்து.       வளைவில் திடமாக உள்ள  பெரிய மகிழுந்து மிக மங்கலான ஒளி மிக வறட்சியான நாள் பாறைகள் நிறைந்த ஒரு நிலம்  சன்னல்களுக்குப் பின் அடைக்கப்பட்டுள்ள நாம் ஏழைகளல்ல. நீ பின்னிருக்கையில் இசையை முணுமுணுக்கிறாய். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை எத்தனை தொலைவு செல்லவதென்று தெரியவில்லை பனிக்காலம் முடிவை நெருங்கிவிட்டது நாம் வண்டி ஓட்டிச்செல்கையில் சொல்லுக்குச் சொல் உனக்குப்புரியவில்லை சொல் என்பதே உனக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால் எப்போதும் உணர்வுகளை நீ செவிமடுக்கிறாய். இசை இசைக்கிறது நீ கால்களை ஆட்டுகிறாய். நான் அதைக் கண்டுகொண்டேன் விளிம்பை நான் அம்மா ஆனால் அதைச் சுட்டிக்காட்டவில்லை அங்கே பார் என்று சொல்லவில்லை நாம் (புல்)தலைகளைக் கடக்கிறோம் தங்கநிறமாகவும் காற்றிலாடியும் இந்த காய்ந்த புல்கள் மனிதர்களாலும் குதிரைகளாலும் அச்சத்தில் உண்ணப்படும்.

Reference : http://www.mudcityjournal.com/layli-longsoldier/

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Google+ (Opens in new window)

Related

Tagged:
  • இதழ் 3

Post navigation

Previous Post Gods/Goddesses, Demons/Demonesses and the Tamil Maiden – C.S. Lakshmi
Next Post சகலமுமாகி விட்ட பூதம் – மானசீகன்

Reader Interactions

Footer

முந்தைய இதழ்கள்

  • February 2019
  • January 2019
  • December 2018
  • November 2018
  • October 2018
  • September 2018
  • August 2018
  • July 2018

சமீபத்திய கட்டுரைகள்

  • Editor’s Picks
  • உடனிருப்பவன் – சுரேஷ் பிரதீப்
  • சங்கேதங்களும் குறியீடுகளும் – விளடீமர் நபக்கவ் – தமிழாக்கம் : கால சுப்ரமணியம்
  • சக்திதேவன் – சமஸ்கிருத மூலம் : சோமதேவர் / தமிழாக்கம் : டாக்டர் வே. ராகவன்
  • அறம் சொல்ல விரும்பு: அரசு ஊழியர்கள் போராட்டம் – மானசீகன்

படைப்புகளைத் தேட

© 2019