• Skip to primary navigation
  • Skip to content
  • Skip to footer

தமிழினி

ஆசிரியர் : கோகுல் பிரசாத்

  • தமிழ்
    • தலையங்கம்
    • திரைப்படக் கலை
    • சிறுகதை
    • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • மதிப்புரை
    • கட்டுரை
    • நாவல் பகுதி
  • English
    • Poetry
    • Editor’s Picks
    • Philosophy
    • Politics
    • Sports
    • Reviving the Classics
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
You are here: Home / தமிழ் / கானுயிர் புகைப்படக் கலைஞர் டி.என்.ஏ. பெருமாளின் பந்திப்பூர் அனுபவங்கள் – எம். கோபாலகிருஷ்ணன்

கானுயிர் புகைப்படக் கலைஞர் டி.என்.ஏ. பெருமாளின் பந்திப்பூர் அனுபவங்கள் – எம். கோபாலகிருஷ்ணன்

by Gokul Prasad
October 12, 2018October 12, 2018Filed under:
  • கட்டுரை
  • தமிழ்
  • பொது

(டி.என்.ஏ.பெருமாள் புகழ்பெற்ற கானுயிர் புகைப்படக் கலைஞர். புகைப்படத் தொழில் நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் மட்டுமே இருந்த போது அவர் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இன்றும் வியப்பளிப்பவை. புகைப்படங்களை எடுப்பது மட்டுமல்லாமல் அவற்றைத் தகுந்த முறையில் புராசஸ் செய்து அச்சிடுவதில் நிபுணத்துவம் கொண்டிருந்தவர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற Royal Photographic Societyயினுடைய Associate-ship 1977ல் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டிலேயே, 1978, அதே அமைப்பினுடைய Fellowship தகுதியையும் பெற்றார்.

கர்நாடக அரசு இவரது பணியை அங்கீகரிக்கும் முகமாக 1995ம் ஆண்டு லலித்கலா அகாதமி விருதை வழங்கி கெளரவித்தது.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் 250க்கும் மேற்பட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும்  பெற்றிருக்கும் இவருடைய புகைப்படங்கள் சர்வதேச அளவில் நடைபெற்ற 1500க்கும் மேற்பட்ட கண்காட்சிகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கானுயிர் புகைப்படக் கண்காட்சிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை Federation of International Photographers அமைப்பால் நடத்தப்படும் கானுயிர் புகைப்படங்களுக்கான உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அணியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இடம் பெற்றிருக்கிறார். தொடர்ச்சியாக நான்கு முறையும் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது.

தனது நண்பர்களுக்காக கானுயிர் புகைப்படங்கள் அடங்கிய பல புத்தகங்களை பதிப்பித்துத் தந்தவர் டி என் ஏ பெருமாள். Photographing Wildlife in India என்ற புத்தகத்தின் ஆசிரியராக விளங்கினார். Some South Indian Butterflies, Encounters in the Forest ( An anthology of Best Wild life photographers of Karnataka ) ஆகிய புத்தகங்களின் இணை ஆசிரியர். எம்.கிருஷ்ணனின் புகைப்படங்கள் தொகுப்பான Eye of the Jungle நூலின் பதிப்பாசிரியர். புகைப்படங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை அவரால் இங்கே பதிப்பிக்க முடியாமல் போனது அவலம்.  சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் “Reminiscences of a Wildlife Photographer” என்ற அவரது நூலைப் பதிப்பித்தது. இந்தியாவில் அது விற்பனைக்கு இல்லை.

சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் அங்கீகாரங்களைப் பெற்றிருந்த டி.என்.ஏ பெருமாள் நமது அண்டை மாநிலங்களான கேரளாவிலும் கர்நாடகத்திலும் பிரபலமான முகம். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சில நூறு பேர்களுக்கு மட்டுமே அறிமுகமானவர். இருந்தவரைக்கும் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வதில் எந்தவித முனைப்பும் காட்டாமல் எப்போதும்போல அடக்கமாகவே இருந்தார். தனது சாதனைகள் குறித்து சொல்லும்போதுகூட மெத்த பணிவுடனே குறிப்பிட்டிருக்கிறார்.)

__________

1960ம் ஆண்டு என்று நினைக்கிறேன். முதன்முதலாக நான் பந்திப்பூருக்குச் சென்றேன். பெங்களுரிலிருந்து ஆனந்தா டிராவல்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் சுற்றுலா பயணம். பதினைந்து அல்லது இருபது ரூபாய் தான். அப்போது என்னிடம் கேமரா கிடையாது. லட்சுமிபதி என்றொரு நண்பர். நான் வேலை செய்து கொண்டிருந்த ரேடியோ கம்பெனிக்குப் பக்கத்துக் கடையில் அவர் இருந்தார். அவர்கள் ஹரிபாய் பீடிக்கு மொத்த ஸ்டாக்கிஸ்டுகள். அப்போது அவரிம் கோடக் 35 எம்எம் கேமரா இருந்தது. அது coupled range finder கேமரா. தொடக்கத்தில் Range finder கேமராக்கள் வந்திருந்தன. இவைகளின் மூலம் நமக்கும் objectக்கும் உள்ள தொலைவை அறிந்துகொண்டு அதற்கேற்ப லென்ஸை உபயோகித்துக் கொள்ள முடியும். Coupled Range finder கேமராவில் இரண்டு பிம்பங்கள் தெரியும், விலகினாற் போல. கேமராவின் nobஐ திருப்பும் போது இரண்டு பிம்பங்களும் ஒரு புள்ளியில் ஒன்றிணையும். அப்படி ஒன்றிணையும் போது சரியான தொலைவிலும் அளவிலும் ஃபோகஸ் செய்தாகி விட்டது என்று படமெடுக்கலாம். இது ஒரு வசதி. அந்த கேமராவைத் தான் பந்திப்பூருக்கு இரவல் வாங்கிச் சென்றேன்.

மூங்கில் லாரிகளில் தான் காட்டுக்குள் அழைத்துச் செல்வார்கள். சரணாலயம் என்ற அமைப்பு முழுமையாக உருவாகியிராத காலகட்டம். அந்தச் சமயத்தில் கூட மைசூர் மகாராஜாவுக்கு மட்டும் காட்டுக்குள் வேட்டையாட அனுமதி இருந்தது. வேறு யாரும் வேட்டையாட முடியாது. காட்டுக்குள் எந்தப் பக்கம் திரும்பினாலும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக திரிந்து கொண்டிருந்தன. புள்ளிமான் கூட்டம் அலை அலையாய் துள்ளியோடிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் யானைகளைப் பார்த்த நினைவில்லை. அப்போது எடுத்தப் படத்தில் பார்த்தால் எருமைகளெல்லாம் எறும்புக் கூட்டத்தைப் போல பொடிப்பொடியாய் தெரியும். ஏதோ கேமரா இருந்தது, படமெடுத்தேன் என்பதுதான். ஒரு ஆர்வம். இந்த ஆர்வமே பின்னாளில் கானுயிர் புகைப்படக்கலையை கற்றுக் கொள்ள ஆதாரமாய் இருந்தது.

ஒரு முறை பந்திப்பூர் காட்டில் காரில் சென்று கொண்டிருந்தோம். நான் முன்பக்க இருக்கையில் ஓட்டுநருக்கு இடது பக்கமாய் அமர்ந்திருந்தேன். தெப்பக் காட்டிலிருந்து மைசூருக்குப் போகும் பாதை. வட்டப் பாதை (Circular Road) என்று சொல்லுவார்கள். வழியில் எதிர்பட்டவர்கள் கொம்பன் யானை ஒன்றை பார்த்ததாகச் சொல்லவும் வண்டியை மெதுவாக செலுத்தினோம். சற்றுத் தொலைவில் அதே பாதையில் கொம்பன் யானை அசைந்து அசைந்து போய்க் கொண்டிருந்தது. ஒத்தைக் கொம்பன். மழை பெய்து ஓய்ந்திருந்தது. மண்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது. மரங்களிலிருந்து இன்னும் துளிகள் உதிர்ந்து கொண்டிருந்தன. மெல்ல அந்த கொம்பனை தொடர்ந்து கொண்டிருந்தோம். ஒரு திருப்பத்தில் ஒத்தைக் கொம்பன் சட்டென பின்னால் திரும்பி எங்களை எச்சரிப்பது போல ஒரு காலையும் துதிக்கையையும் உயர்த்திக் கொண்டு பிளிறியது. கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, வெளிப்பக்கமாய் எம்பியபடி படமெடுக்க தயாராயிருந்த நான் அந்த காட்சியைப் படமெடுத்தேன். ஈர இலைகளோடு மரங்கள். சாலையிலும் மழையின் ஈரம். ஒரு காலையும் துதிக்கையையும் தூக்கிக் கொண்டு ஒத்தைக் கொம்பன். கச்சிதமாக அமைந்து போன படம்.

லண்டனில் உள்ள Royal Photographic Societyயின் சஞ்சிகையில் அந்தப் படம் இடம் பெற்றிருந்தது. அதோடு இன்னொரு படமும் வெளியிடப்பட்டது. இந்தப் படங்களை நான் அனுப்பவில்லை. அப்போது RPSன் தலைவராக இருந்தவர் டாக்டர் ரிவர் ஏன்ஜலா என்கிற பெண்மணி. அவர் உலகறிந்த கானுயிர் புகைப்படக் கலைஞர். Hazzle Blade கேமரா நிறுவனத்தின் சார்பில் பெங்களுரில் நடந்த ஒரு பயிலரங்கிற்கு அவர் வந்திருந்தார். அவரைச் சந்தித்து நான் எடுத்த படங்கள் சிலவற்றைக் காட்டினேன். அவருக்கு அந்தப் படங்கள் பிடித்திருந்தன. இரண்டு படங்களை தேர்ந்தெடுத்து சஞ்சிகையில் பிரசுரிப்பதாகச் சொல்லி வாங்கிச் சென்றார்கள். அதில் இடம்பெற்ற இன்னொரு படம் ரத்தம்பூரில் எடுத்த லங்கூரின் படம்.

மத்தியபிரதேசத்தின் நாகூர் சமஸ்தானத்தின் மகாராஜா சந்தூருக்கு விருந்தினராக வந்திருந்த போது அவர்களை அழைத்துக் கொண்டு முதுமலை, பந்திப்பூர் என்று எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போயிருந்தேன். பந்திப்பூரில் அபயாரண்யா விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தோம். நிறைய பெண் யானைகளை பார்த்திருந்தோம். மகாராஜாவுக்கு கொம்பன் யானை ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அதே சமயத்தில் பயமும் கூட. அப்போது அங்கே தொட்டுகாளான் என்றொரு வழிகாட்டி (tracker) இருந்தார். மிகப்பெரிய அனுபவசாலி. பந்திப்பூரில் மூலைமுடுக்கெல்லாம் அவருக்கு அத்துப்படி. என்னென்ன விலங்குகள் எங்கெங்கு உள்ளன, எப்போதெல்லாம் அவற்றைப் பார்க்க முடியும் என்றெல்லாம் அவரைத் தான் கேட்க வேண்டும். எம்.கிருஷ்ணன் பந்திப்பூர் வந்தால் தொட்டுகாளான் தான் உடனிருப்பார். அவர் எங்களுடன் இருந்தார். ஒரு நாள் ராத்திரி எட்டு மணியாகி விட்டது. தொட்டுகாளான் வீட்டுக்குப் போய்விட்டு காலையில் வருவதாய்ச் சொல்லிப் புறப்பட்டார். அவரது குடிசை காட்டின் எல்லையில் இருந்தது. நல்ல இருட்டு. போனவர் சற்று நேரத்திற்குள் திரும்பி வந்தார். கொஞ்ச தூரத்தில் சாலையோரமாய் ஒரு கொம்பன் யானை இருப்பதாகவும் காலையில் போய் பார்க்கலாமென்றும் தகவல் சொல்லிவிட்டு போய்விட்டார். எனக்கு பெரிய ஆச்சரியம். அப்படியொரு மையிருட்டில் கொம்பன் யானை இருப்பதை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அது எப்போது என்ன செய்யும் என்று சொல்ல முடியாது.

சொன்னபடியெல்லாம் காலை ஐந்து மணிக்கு வந்து கொம்பன் யானை இருந்த இடத்திற்கு அழைத்துப் போனார். அழகான யானை. பெரிய கொம்பு. காட்டுக்குள்ளிருந்து மெல்ல அசைந்து நடந்து வருகிறது. நாகூர் மகாராஜா ஒரு யானை மேல் உட்கார்ந்திருக்கிறார். ”போதும். போதும். நல்லா இருக்கு. இதுவே போதும். இன்னும் பக்கத்திலே வேண்டாம்” என்று யானையில் இருந்தபடியே சொல்கிறார். கொம்பன் யானையைப் பார்த்த பரவசம். அதைவிட பயம். இன்னொரு உதவியாளருடன் அவர்களை விருந்தினர் இல்லத்துக்குத் திரும்ப அனுப்பிவிட்டு நான் புகைப்படமெடுத்தேன். கொம்பன் யானை மெல்ல காட்டுக்குள் நடந்து யானை முகாமை நெருங்கியது. யானை முகாமில் மற்ற யானைகளையெல்லாம் வெளியே அழைத்துப் போயிருந்தார்கள். முகாமிற்கு மத்தியில் ஒரு பெரிய மரம். அந்த மரத்திற்கு அடியில் இரண்டு குட்டி யானைகள். சங்கிலி போட்டு கட்டியிருந்தார்கள். இரண்டும் கொம்பன் யானை வருவதைப் பார்த்ததும் பயத்தில் அலறுகின்றன. கொம்பன் யானை குட்டி யானைகளின் அருகில் சென்று தும்பிக்கையால் அவற்றை மெல்ல தடவித் தந்தது. ”பயப்படாதே, ஒன்னும் செய்ய மாட்டேன்” என்று சொல்லுவது போல அவற்றைத் தடவி நின்றது. குட்டிகள் சமாதானமானதும் கொம்பன் முகாமை விட்டு வெளியே வந்து காட்டுக்குள் போய் விட்டது.

முகாமுக்குத் திரும்பியதும் நாகூர் மகாராஜா சொல்கிறார் ”பெருமாள், நீங்க எங்க ஊருக்கு வாங்க. அங்க நெறைய புலிகள் இருக்கு. எத்தனை கிட்டத்தில வேணா போய்ப் பாக்கலாம். எனக்கு பயம் கிடையாது. ஆனா யானைகள்னா பயம்”.

அந்தக் கொம்பனை மறுபடியும் போய்ப் பார்க்கலாம் என்று தொட்டுகாளானை அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். மோயாறு ஆற்றோரமாய் அது மேய்ந்து கொண்டிருந்தது. நாங்களும் சற்று தொலைவில் அதை கவனித்துக் கொண்டிருந்தோம். கொம்பனுக்கு அப்போது மதம் பிடித்திருந்தது.

கொம்பனுக்கு அப்போது ஏதோ ஒரு வலி இருந்திருக்க வேண்டும். ஆற்றுக்குள் மண்டியிட்டு உட்கார்ந்தது. கரையோரமாய் ஒதுங்கியிருக்கும் கொழிமணல் சேற்றில் தும்பிக்கையை உள்ளே விட்டு தந்தங்களை அழுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தது. தந்தங்களின் மீதான அழுத்தம் அதனுடைய வலிக்கு இதமாயிருந்திருக்க வேண்டும். கொஞ்ச நேரம் இப்படியே இருந்துவிட்டு பிறகு தும்பிக்கையை எடுத்து மதவீக்கத்திற்கு சற்று கீழே வைத்து அழுத்தியது. அப்படி அழுத்தியதுமே மதவாயிலிருந்து வெள்ளையாக டூத்பேஸ்ட் மாதிரி பிதுங்கி வழியத் தொடங்கியது. திரும்பவும் தும்பிக்கையை சேற்றில் விட்டு படுத்துக் கொண்டது. கேமரா கையிலிருந்தும் படமெடுக்க முடியவில்லை. வெளிச்சம் போதாமல் மங்கலாக இருந்தது. இப்படியே செய்து கொண்டிருந்த யானை திடீரென்று தண்ணீருக்குள்ளிருந்து மேலே எழுந்தது. கரையில் ஏறி வெளியில் வந்தது. நாங்கள் இருவரும் மறைந்து நின்றபடிதான் பார்த்து கொண்டிருந்தோம். ஆனாலும் எங்கள் வாடை அதற்கு பட்டிருக்க வேண்டும். கரையில் ஏறிவந்த கொம்பன் எங்களை நோக்கி வந்தது. நாங்கள் இருவரும் ஓடத் தொடங்கினோம்.

காட்டுக்குள் ஒரு கொம்பன் யானை துரத்தும்போது புத்தகத்தில் எழுதி வைத்திருப்பதைப் போல மேட்டிலிருந்து பள்ளம் பார்த்து ஓடுவது, தாறுமாறாக ஓடுவது என்பதெல்லாம் செல்லுபடியாகாது. ஓட வேண்டும். அவ்வளவுதான். தொட்டுகாளான் குருவி மாதிரி பறந்து ஓடுகிறான். மலைவாசி அவன். நான் ஷூக்கள் அணிந்திருக்கிறேன். தோளில் கேமரா. காட்டில் மரங்களினூடாக ஓடுவது சுலபமில்லை. ஓடிக் கொண்டே இருக்கும் போது திடீரென்று ஒரு மரக்கட்டையோ வேரோ என் காலை இடறச் செய்தது. அவ்வளவுதான். தலைக்குப்புற விழுந்தேன். என்ன நடந்தது என்றே தெரியாமல் சில கணங்கள். பார்த்தால் ஒரு பள்ளம். பள்ளத்துக்குள் கேமராவுடன் நான் கிடக்கிறேன். என் பின்னாலேயே வந்து கொண்டிருந்த கொம்பனுக்குப் புரியவில்லை. நான் பள்ளத்துக்குள் விழுந்தது தெரியவில்லை. ”பெருமாள் மாயமாய் மறைந்து போய்விட்டார்” என்று வியந்தபடி சுற்று முற்றும் பார்த்தது. பள்ளத்தையோ அதிலிருந்த என்னையோ அது கவனிக்கவில்லை. திரும்பிப் போய் விட்டது. நான் மெல்ல வெளியே எட்டிப் பார்த்து அது திரும்பி போய்விட்டதை உறுதி செய்து கொண்டு மேலே வந்தேன். எப்போதோ சாலையைச் சென்றடைந்து விட்ட தொட்டு காளானிடம் போய்ச் சேர்ந்தேன். இருவருமாய் முகாமுக்கு திரும்பினோம்.

பந்திப்பூரில் தாவரக்கட்டே என்றொரு இடம் உண்டு. அங்கே வேட்டையாடுதல் மகாராஜாவுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த காலம். நான் முதன்முதலாக கொடாக் 35எம்எம் கேமராவுடன் போயிருந்த சமயம். அப்போது மெயின் ரோடுக்கு பக்கத்திலேயே ரேஞ்ச ஆபிஸரின் வீடு இருக்கும். அதற்குத் தொட்ட மாதிரி விருந்தினர் விடுதி. காரில் வந்து கொண்டிருக்கும்போது ரேஞ்ச் ஆபிஸரின் வீட்டிலிருந்து 50 கெஜந்தான் இருக்கும். ஒரு பள்ளம். அங்கே ஒரு தந்திக்கம்பம். பக்கத்தில் ஒரு காட்டெருமை படுத்திருந்தது. ராத்திரி எட்டு மணி சமயம் அது. காரிலிருந்து சாதாரண லென்ஸை உபயோகித்து பிளாஷ் போட்டு படமெடுத்திருக்கிறேன். அதுபோல அப்போது திரும்புமிடத்தில் எல்லாம் காட்டெருமைகளை பார்க்க முடியும். 1968வரையிலும் இப்படித்தான் இருந்தது. 1968ல் ரெண்டர்பெஸ்ட் என்றொரு நோய் வந்தது. காட்டெருமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைவதற்குக் காரணமானது. அதற்கு முன்பு வரை முதுமலைக்கு எப்போது போனாலும் கண்டிப்பாக யானைகளையும் காட்டெருமைகளையும் பார்க்க முடியும் என்ற நிலை இருந்தது. காலப்போக்கில் மாறிவிட்டது.

மைசூர் மகாராஜாவுக்கு, ஜெயசாம்ராஜ உடையார், தாவரக்கட்டையில் ஒரு வேட்டை விடுதி இருந்தது. அதனுடைய வாசலில் வேட்டையாடப்பட்ட புலிகளைக் கிடத்தி துப்பாக்கியுடன் வேட்டை உடையணிந்து மகாராஜா கம்பீரமாக நிற்பது போன்ற புகைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். 1962ம் ஆண்டு. டெக்கான் ஹெரால்டில் வெளியானது. அப்போது காட்டுக்குள் புலிகள் இருக்கும் பகுதிகளின் சாலையோரங்களில் மணலை போட்டு வைத்திருப்பார்கள். புலிகள் கடந்துபோகும்போது அவற்றின் கால்தடங்கள் அதில் பதியும். அதை வைத்து அவற்றின் நடமாட்டங்களை கணிப்பார்கள். அப்போது தாவரக்கட்டே என்ற அந்த இடம் இப்போது இருப்பதுபோல அவ்வளவு பெரியதாக இருக்கவில்லை. சிறியதாகத்தான் இருந்தது. இப்போது காலப்போக்கில் வளர்ந்துவிட்டது. யானைகளும் நிறைய இருக்கும். இரண்டு யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்த ஒரு காட்சியை இந்தப் பகுதியில்தான் படமெடுத்தேன். பக்கத்தில் மூங்கில் புதர்கள். இரண்டும் ஒன்றையொன்று முட்டி மோதித் தள்ளுவது போல காட்சி அமைந்தது. ஆர்வோ கலர் பிலிமை உபயோகித்தேன். இன்னொரு பக்கத்திலிருந்து பெரிய கொம்பன் யானை. ஓரமாக மிக மெதுவாக அசைந்தாடி வந்தது. Gentle Giant. எவ்வளவு மென்மையானது என்றால் வருகிற வழியில் ஒரு மூங்கில் கொம்பு சற்றுத் தாழ்வாக தலையை இடிப்பதுபோல வளைந்திருக்கிறது. அந்த மூங்கில் கொம்பை துதிக்கையால் மேலே தள்ளிவிட்ட பிறகுதான் கடந்து வருகிறது. அவ்வளவு மென்மை. அந்தப் படத்தை இப்போது பார்த்தாலும்கூட அந்த கொம்பனின் முகத்தில் ஒரு புன்சிரிப்பு இருப்பதுபோலத் தோன்றும். மேன்யாசீஜே என்றொரு கேமரா. 250எம்எம் லென்ஸ். அதில்தான் கருப்பு வெள்ளை படத்தை எடுத்தேன்.

எந்த ஒரு விலங்கினத்தை படமெடுக்கும்போதும் பக்கவாட்டிலிருந்து எடுக்கும்போது அந்த விலங்கின் உடல் பாகங்கள் அனைத்துமே தெளிவாகப் பதிவாகும். ஒரு யானையைப் பக்கவாட்டிலிருந்து எடுத்தால் தும்பிக்கை, காது, தந்தம், கால்கள், வால், பெருத்த வயிறு என்று எல்லா அம்சங்களுமே தெளிவாக அமையும். அதுவே அந்த யானை 45 டிகிரி தலையை மட்டும் நம் பக்கமாய் திரும்பினால், அந்த கோணம் வேறொரு அற்புதமான படத்தை அமைத்து தரும். இரண்டு கண்கள், தந்தங்கள், காதுகள் என்று தெரிவதோடு உடலின் மொத்த அமைப்பும் சேர்த்துக் கிடைக்கும். இப்படிப்பட்ட கோணத்திலிருக்கும் படங்கள் கூடுதலான உயிர்ப்போடு இருக்கும். யானை மூங்கிலை உரிப்பதோ, தும்பிக்கையை நீட்டி மடக்குவதோ படமாகும்போது அந்தப் படத்துக்கு ஒரு அசையும் தன்மை ஏறிவிடும். யானையின் உடல் மொழி படத்தைப் பார்க்கும் போது தெளிவாகும். அந்த விதத்தில் படத்தை எடுக்கும் தருணத்தில் சரியான ஒரு அசைவை படம் பிடிக்க வேண்டும். பக்கவாட்டில் ஒரு யானையின் உடல் முழுக்க தெளிவாகத் தெரியும் விதத்தில் படமெடுப்பது எளிதானது. ஆனால் ஒரு யானையின் அசைவை, சரியான கோணத்தில் சரியான தருணத்தில் படம் பிடிப்பதுதான் நல்ல புகைப்படக் கலைஞனின் திறமை. அந்த விதத்தில் இந்த கொம்பன் யானை மூங்கில் புதர் ஓரத்தில் நடந்து வருவதுபோன்ற புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதே யானை இன்னொரு இடத்தில் கீழே சாய்ந்து கிடக்கும் மரத்தின் பட்டையை உரித்துத் தின்பது போல ஒரு காட்சி. மரப்பட்டை யானைக்கு மிகப் பிடித்தமான உணவு. மிக சத்தானதும்கூட. மரக்கட்டையை இப்படியும் அப்படியும் புரட்டி தனக்கு தேவையான இடத்தில் பட்டையை உரித்துத் தின்னும். அவ்வாறு பட்டையை உரிப்பது போன்ற நிலையில் படமெடுத்திருக்கிறேன். அதுவும் கச்சிதமாக அமைந்த படம்.

எப்போது பந்திப்பூர் போனாலும் முதுமலைக்கும் செல்வதுண்டு. ஒரு முறை அங்கே போயிருந்தபோது திரு விக்டர் என்று மண்டல காட்டிலாக்கா அதிகாரி இருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்கு போய் சேர்ந்தவுடன் அவர் வெளியே வந்தார். கச்சிதமான நேர்த்தியான உடையுடன் வந்து ஒரு சல்யூட் அடித்தார். ”என்ன மிஸ்டர் விக்டர், விலங்குகளெல்லாம் என்னமாதிரி நிலைமையில் உள்ளன?” என்று கேட்டோம். அவர் உடனே ”துரதிர்ஷ்டவசமாக எல்லாமே பந்திப்பூர் போய்விட்டன” என்று என்னைப் பார்த்தார். ”அப்படியென்றால் எங்களை பந்திப்பூருக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றோம். அவர் எங்களிடமிருந்தும் எங்கள் அலைக்கழிப்பிலிருந்தும் தப்புவதற்காகவே விலங்குகளெதும் இங்கில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் நாங்கள் அவரை விடவில்லை.

இன்னொரு முறை முதுமலையில் யானைமீது சவாரி செய்தபோது ஒரு பெரிய கொம்பன் யானையைப் பார்த்தோம். பிரமாண்டமான யானை. பெரிய வளமான கொம்புகள். கம்பீரமாக இருந்தது. மரத்திற்குப் பக்கத்தில் அது நிற்பதையும் தும்பிக்கையைத் தூக்கி மரக்கிளைகளை ஒடிப்பதையும் படமெடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது மறு பக்கத்திலிருந்து இன்னொரு கொம்பன் யானை வந்தது. அளவில் அது சிறியது. பெரிய யானையைப் பார்த்ததும் ஒரு நொடி நின்றது. பெரிய யானையும் குட்டிக் கொம்பனைப் பார்த்துவிட்டது. இரண்டுமே நேருக்கு நேராகப் பார்த்து நிற்கின்றன. குட்டிக் கொம்பனுக்கு பெரிய கொம்பனைப் பார்த்து பயம். என்ன இருந்தாலும் அளவில் பிரமாண்டமான யானை அல்லவா? மெதுவாக அந்த குட்டிக் கொம்பன் பக்கத்தில் வந்தது. பெரிய கொம்பன் பேசாமல் பார்த்துக் கொண்டே நின்றது. குட்டி கொம்பன் தன் தும்பிக்கையை எடுத்து பெரிய யானையின் கொம்பு மீது வைத்தது. இரண்டு பேர் கை குலுக்கிக் கொள்வதைப் போல இருந்தது. நான் சின்னவன், உன்னை என் எஜமானனாக ஏற்றுக் கொண்டுவிட்டேன் என்று சொல்வது போல இருந்தது அந்தக் காட்சி. ஆப்பிரிக்க யானைகளில் கொம்பன் யானைகளுக்கு வயதான பிறகு ஒரு இளம் யானையின் துணை தேவை என்று படித்தது நினைவுக்கு வந்தது. அந்த இளம் யானையை அஸ்தயி என்று குறிப்பிட்டிருந்தார்கள். மனிதர்களுக்கும் இதே நிலைதானே? வயதான காலத்தில் இளம் தலைமுறையினரின் துணை தேவையாகத் தானே இருக்கிறது.

அதே பெரிய யானையை பலமுறை அதே குறிப்பிட்ட இடத்தில் நான் பார்த்திருக்கிறேன். பலரும் அந்த யானையின் இருப்பிடங்கள் குறித்து சொல்லியவாறே இருப்பார்கள். கொஞ்ச நாளுக்கு கண்ணில் தட்டுப்படாமலேயே இருக்கும். ”அந்த யான அங்க இருந்தது சார்” என்று காட்டுக்குள் யாராவது சொல்லுவார்கள். அதனுடைய சுற்றுப்பாதையில் அது திரிந்துகொண்டிருக்கும். இன்றைக்கு அறிவியலின் வளர்ச்சி காரணமாக யானைகள், விலங்குகளின் நடமாட்டத்தை கம்ப்யூட்டரின் உதவியுடன் அறிந்து கொள்கிறார்கள். ரேடியோ காலரை பொறுத்தி சேட்டிலைட்டின் உதவியுடன் பெங்களுரில் உள்ள Inst of Scienceல் உட்கார்ந்தபடியே ஒரு குறிப்பிட்ட யானை எங்கிருக்கிறது என்று சொல்ல முடிகிறது. இது கானுயிலில் ஒரு பெரும் வளர்ச்சி. அந்தக் காலத்தில் நேரடியான கள அனுபவத்தின் மூலம் விலங்குகளின் பழக்க வழக்கங்களைக் குறித்தும் போக்குகள் குறித்தும் அறிந்துகொண்டிருந்த அளவு இன்றைய அறிவியல் முறைமைகளின் மூலம் அறிந்து கொள்வது அவ்வளவாக சாத்தியமில்லை. இன்றைக்கும் நேரடியான கள ஆய்வில் பங்கேற்கும் ஆய்வாளர்கள் உண்டு. பழைய காட்டிலாக்கா அதிகாரிகளும் சிகாரிகளும் தங்களுடைய சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த ஆய்வுகளை தங்களது ஆர்வத்தின் காரணமாக, பலன் கருதாமல் செய்தார்கள். அதே ஆய்வுகளை அறிவியலின் துணையோடு செய்வதற்கு இன்று சம்பளம் தரப்படுகிறது. நேரடியான கள ஆய்வின் மூலம் நாம் பெறும் அறிவுக்கும் கம்ப்யூட்டரின் உதவியோடு நாம் பெறும் அறிவுக்குமான இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இது விமர்சனமல்ல. என்னுடைய கருத்து தான். உதாரணத்திற்கு அறிவியிலின் துணையுடன், கம்ப்யூட்டர் மூலமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட விலங்கு இந்த எண்ணிக்கையில் இருக்கிறது என்று சொல்லும்போது முதலில் காட்டின் மொத்த பரப்பை எடுத்துக் கொள்கிறார்கள். 800 சதுர கிலோமீட்டர் என்று வைத்துக்கொண்டால், அந்த பரப்பில் மொத்தமாக 426 புலிகள் இருக்கின்றன என்று கணக்கிட்டு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு இரண்டரை புலிகள் இருக்கின்றன என்று தகவலைப் பதிவு செய்கிறார்கள். அதெப்படி இரண்டரை புலிகள் இருக்க முடியும் என்று யோசிப்பதேயில்லை. இதற்கு மாறாக நான் குறிப்பிட்ட தொட்டுகாளான் என்ற அந்த உதவியாளரை எடுத்துக் கொள்ளலாம். அவர் ஒரு யானை எவ்வளவு பக்கத்தில் இருக்கிறது என்பதை அதன் சாணத்தை வைத்து சொல்லி விடுவான். சாணத்தைக் கிளறி அதன் வெதுவெதுப்பை வைத்து அது இத்தனை தொலைவில் இருக்கிறது என்று அவரால் சொல்லிவிட முடிந்தது. அது நேரடியான கள அனுபவம். இன்றைக்கு அந்த சாணத்தை எடைபோட்டு அதில் எத்தனை வெர்மின்கள் உள்ளன என்று கணக்கிடுகிறார்கள். பழைய காலத்தில் புலிகள், சிறுத்தைகள் எல்லாமே வெர்மின்களாகத்தான் கருதப்பட்டன. அதனால்தான் அவற்றை வேட்டையாடினால் அதற்காக சன்மானம் தரப்பட்டது. குறிப்பாக wild dogs களை வேட்டையாட நிறைய சன்மானம் தரப்பட்டது. அவை கானுயிர்களுக்கு பாதகமானவை என்று நம்பப்பட்டதால் அவற்றை வேட்டையாட முழுமையான அனுமதி வழங்கப்பட்டது. இப்போது அப்படியின்றி அவற்றைக் குறித்த விழிப்புணர்வு உள்ளது. Wild dogs காட்டுக்குள் உயிர் சூழலின் சமநிலையை பேண மிகவும் உதவுகிறது என்பதை அறிந்து கொண்டுள்ளார்கள். குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு மான் கூட்டம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்? அங்கிருக்கும் காட்டுப் பகுதி கொஞ்சமும் மிஞ்சாமல் போய்விடும். அதுவே ஒரு wild dog வந்துவிட்டால் அந்த மான் கூட்டம் சிதறி வேறு பக்கமாய் ஓடி விடுகிறது. இதனால் காட்டுக்குள் தாவரங்கள் மீண்டும் தழைப்பதற்கான கால அவகாசம் கிடைக்கிறது. காட்டுக்குள் ஒவ்வொரு விலங்கும் அந்த உயிர் சூழலுக்கு மிகவும் முக்கியமானது.

Wild dogs பந்திப்பூரில் நிறைய பார்க்கமுடியும். அவை ஆட்களை அச்சுறுத்தியதாகவோ, தாக்கியதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அவை புலியை சிறுத்தையை தாக்கக்கூடியவை. புலிகளும் சிறுத்தைகளும் wild dogs இருப்பது தெரிந்தாலே பயந்து ஓடிவிடும். மழைக் காலத்தில் பந்திப்பூரில் இவற்றை நிறைய இடங்களில் பார்க்க முடியும். எல்லா பருவங்களிலும் பார்க்கக் கூடிய சில பகுதிகளும் உள்ளன.

சென்ற ஆண்டு நானும் டாக்டர் மயில்வாகனமும் பந்திப்பூர் போயிருந்தோம். பந்திப்பூர் டேங்க் பக்கத்தில் வரும்போது வாகன ஓட்டுநர் சபாஸ்டியன் வாகனத்தை நிறுத்திவிட்டார். சாலையோரத்தில் பார்த்தால் அப்போதுதான் ஒரு wild dog கூட்டம் ஒரு சீத்தல் மானை அடித்துப் போட்டுள்ளது. மணி ஏழுதான் ஆகியிருக்கும். வண்டியிலிருந்து நான் படமெடுத்தேன். ஆனால் ஆட்களைப் பார்த்ததும் ஒரு நாயைத் தவிர பிறவெல்லாம் ஓடிப்போய்விட்டன. முன்பே சொன்னது போல காட்டுக்குள் இருக்கும் ஜனங்கள் நாய்களை விரட்டிவிட்டு இரையை கைப்பற்றிக் கொள்கிறார்கள் இல்லையா? அதனால் தான் ஜனங்களைக் கண்டதும் ஓடி விடுகின்றன. இது சாலையோரத்தில் என்பதால் இப்படி நடக்கிறது. காட்டுக்குள் என்றால் இவ்வாறிருக்காது. அந்த ஒன்று மட்டும் இரையைத் தின்று கொண்டிருந்தது. குறைவான வெளிச்சம் தான் என்றாலும் டிஜிட்டல் கேமரா என்பதால் படமெடுக்க முடிந்தது. நாற்பத்தியொரு ஆண்டுகளாக காட்டுக்குள் போய்வந்து கொண்டிருந்த போதும் ஒரு wild dog இரை கொல்வதைப் படமெடுக்க எனக்கு நாற்பதாண்டுகள் ஆகியிருக்கின்றன. வனத்திற்குள் சந்தர்ப்பங்கள் எப்போதும் வாய்ப்பதில்லை. திரும்பத் திரும்ப செல்வதன் வழியாக மட்டுமே நல்ல படங்களை எடுப்பதற்கான சந்தர்ப்பங்களை நாம் கண்டுகொள்ளவும் உபயோகப்படுத்திக் கொள்ளவும் முடியும். அதிர்ஷ்டம் என்பது நாம் காட்டுக்குள் சென்றால் தான் கைகொடுக்கும். உள்ளே போய் நிறைய நேரம் செலவு செய்ய வேண்டும். நல்ல தரமான உபகரணங்கள் கையிலிருக்க வேண்டும்.

“இயற்கை வழிபாடு என்பது நமது பாரம்பரியத்தில் இருக்கும் ஒரு அம்சம். இயற்கை தொடர்ந்து தனது வலிமையை மனிதனுக்கு பல்வேறு ரூபங்களில் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. பூகம்பம், புயல், கடல் சீற்றம் என்று அதன் வெளிப்பாடுகளை மனிதன் பொருட்படுத்தாதவனாக இருக்கிறான். எந்தவொரு காட்டுக்குள் நான் நுழைந்தாலும் நான் கடவுளிடம் வந்தடைந்ததான ஒரு உணர்வை அடைவேன். சில நிமிடங்கள் கண்மூடி நின்றுவிடுவேன். இயற்கை முன்பாக மனிதன் மிகச் சிறியவன் என்ற எண்ணம் ஏற்படும். இந்த காட்டுக்குள் வரும் சந்தர்ப்பத்தை தந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுவேன். இயற்கை சார்ந்த ஒரு வழிபாட்டு மனோபாவம் என்று சொல்லலாம். இதுவே எனது படங்களிலும் கருத்துக்களிலும் பிரதிபலிக்கிறது என்று நம்புகிறேன்”.

டி.என்.ஏ பெருமாள் தன் வாழ்நாள் முழுவதும் இந்த நம்பிக்கையைக் கைவிடவில்லை. கானுயிர் புகைப்படக் கலை சார்ந்த நுட்பங்களை அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தரும்போது இந்த நம்பிக்கையையும் அவர்கள் மனதில் ஆழப் பதியும்படியாகச் செய்திருப்பது அவரது இன்னும் ஒரு சாதனை.

Share this:

  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Google+ (Opens in new window)

Related

Tagged:
  • இதழ் 4

Post navigation

Previous Post படமெடுத்தாடும் பாய்மரங்களும் மரக்கலக் கொத்தளங்களும் : திரைகடலோடிய சகாப்தங்களில் இந்தியப் பெருங்கடலும் சில வழக்கொழிந்த மொழிகளும் – அமிதவ் கோஷ் – தமிழாக்கம்: கால.சுப்ரமணியம்
Next Post ஆல்டஸ் ஹக்ஸ்லியின் அகவெளிப் பயணங்கள் – சுநீல் கிருஷ்ணன்

Reader Interactions

Footer

முந்தைய இதழ்கள்

  • October 2019
  • September 2019
  • August 2019
  • July 2019
  • May 2019
  • April 2019
  • March 2019
  • February 2019
  • January 2019
  • December 2018
  • November 2018
  • October 2018
  • September 2018
  • August 2018
  • July 2018

சமீபத்திய கட்டுரைகள்

  • ஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்
  • Western Influences on Gandhi and India’s Liberation: Modi’s use of Gandhi as a mask – Aravindan Kannaiyan
  • நீ எனும் தற்சுட்டு: அபி கவிதைகள் – இசை 
  • போரும் அகிம்சையும்: காஷ்மீர் குறித்து காந்தி – த. கண்ணன்
  • தமிழ்ச் சிறுகதை – இன்று : தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்

படைப்புகளைத் தேட

© 2019